அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
தமிழ் மொழியில் முதலெழுத்து – உயிரெழுத்து “அ” (அகரம்). உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளிலுமே முதல் எழுத்து அகர ஒலியில் தான் ஒலிக்கும். இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் கூறுகிறது. தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு இத்தகைய பல மெய்யியல் கருத்துக்களைச் சார்ந்தே அமைந்துள்ளது. செய்திகளைக் கடத்துவதாக மட்டுமின்றி, மனித குலத்திற்கு அறம் கூறும் செம்மொழிதான் நம் தமிழ் மொழி. இத்தகைய பெருமைவாய்ந்த நம் தமிழ் மொழி நமது அடையாளத்தின் ஆணி வேர்.
திரைகடல் தாண்டி திரவியம் தேடுவதற்காக, புலம் பெயர்ந்து கலிஃபோர்னியாவில் வாழும் தமிழர்கள், தங்களின் வேர் தேடிச் செல்லும் பயணத்தின் முதற்படி தான் தீபகற்ப தமிழ் பள்ளி. இங்கேயே பிறந்து வளரும் தமிழ் குழந்தைகள், தங்களின் தாய் மொழியான தமிழை அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் பண்பாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காகவும், தன்னார்வலர்கள் பலர் ஒன்றுகூடி இழுக்கும் மாபெரும் தேர் தான் தீபகற்ப தமிழ் பள்ளி.
Welcome to Peninsula Tamil School – a non-profit organization operated entirely by dedicated volunteers. Our mission at Tamil School is to foster the growth and appreciation of the Tamil language, culture, and community. With a rich history spanning over 15 years, we have proudly served the Foster City area, sharing our passion for Tamil heritage with the community.
At Peninsula Tamil School, we are dedicated to nurturing young minds, and we are proud to have over 100 students joining us each year. Our students embark on a journey where they not only learn to write, read, and pronounce Tamil fluently but also immerse themselves in the richness of our Tamil tradition and culture. Join us in our commitment to preserving the essence of Tamil culture while mastering the language.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆர்வமிக்க பெற்றோர்களால், 2008ம் ஆண்டு ஜூலை மாதம் Foster City Booth Bay பூங்காவில் தீபகற்ப தமிழ் பள்ளியின் தொடக்கம் வித்திடப்பட்டது.
நூலகம் மற்றும் தமிழர்கள் பொதுவாக கூடும் இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், மற்றும் தமிழர்கள் அதிகம் பணிபுரியக்கூடிய பெரு நிறுவனங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2008 ஆகஸ்ட் மாதத்தில், 40 குழந்தைகளுடன் Foster City-யில் இருந்த Challenge பள்ளியில் தீபகற்ப தமிழ் பள்ளி தன் முதல் ஆண்டை செவ்வெனத் தொடங்கியது.
2017ம் ஆண்டு முதல் தீபகற்ப தமிழ் பள்ளி சுமார் 100 மாணவ மாணவியர் மற்றும் 40 தன்னார்வலர்களுடன் San Mateo-வில் உள்ள Hillsdale உயர் நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
2022-2023 கல்வியாண்டில், தீபகற்ப தமிழ் பள்ளி தன் பதினைந்தாம் அகவையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
மூன்று வயது குழந்தைகள் முதல் ஆர்வமுள்ள பெரியவர்கள் வரை அனைவரும் தமிழை சரளமாக எழுதவும், படிக்கவும், பேசவும், புரிந்துகொள்ளவும் கசடற கற்றுத்தருவதே தீபகற்ப தமிழ் பள்ளியின் தலையாய நோக்கம்.